Tuesday, August 25, 2026
Huisதாயகம்22வது அரசியலமைப்புத் திருத்த விவகாரம்; எதிர்க்கட்சிகள் இரகசியப் பேச்சு..!

22வது அரசியலமைப்புத் திருத்த விவகாரம்; எதிர்க்கட்சிகள் இரகசியப் பேச்சு..!

சர்ச்சைக்குரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்புச் சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பின் போது, ஆளுங் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் இரகசியப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சட்டமூலங்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பமின்மையை காட்டி வருவதாக அறிய முடிகிறது. அவர்களுடனேயே இந்த ஆதரவு திரட்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, செயற்பாட்டு சபை மற்றும் தேசிய செயற்குழு ஆகியவற்றின் உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க என்பவரும் இச்சட்ட மூலங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நபர்களில் ஒருவராவார்.

இதற்கிடையில், இந்த சட்டமூலங்கள் மீதான விவாதம் ஒக்டோபர் மாத தொடக்கத்தில் நடைபெறக்கூடும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18ஆம் திகதி இச்சட்டமூலங்கள் முதன்முறையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதற்கமைய இச்சட்ட மூலங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு இரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் இந்த சட்டமூலங்களுக்கு எதிராக வரலாற்றில் அதிகளவிலான மனுக்களை தாக்கல்செய்ய அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. தற்போது வரை 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண சட்டமூலம், விசேட சட்டமூலம் அல்லது அரசியலமைப்புத் திருத்தம் எதுவாயினும் குழுநிலை சந்தர்ப்பத்திலோ அல்லது மூன்றாவது வாசிப்பின் போதோ பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடல் முறை அல்லது சபை அங்கீகார நடைமுறைகள் மூலமே வாக்களிக்கவேண்டும். பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின்படி இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு இடமில்லை.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வினவலுக்கு பதிலளித்த அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இச்சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!