வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், கிழக்கு மாகாண மக்களின் தற்போதைய தேவைகள், நாட்டின் அரசியல் நிலவரங்கள் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியம் தொடர்பாக இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், அரச மற்றும் தனியார் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகள், இராணுவ மயமாக்கல் மற்றும் வாழ்வாதாரச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் நிலைமை, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான நீண்ட காலக் கோரிக்கைகளுக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், “அமைதியான மற்றும் வளமான இலங்கையை உருவாக்குவதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்” என்றும் உறுதியளித்தார்.


Recent Comments