Friday, September 4, 2026
Huisதாயகம்வனஇலாகா என்பது எமது மக்களின் காணிகளைத் அபகரிக்கும் திருட்டுக் குழு..!

வனஇலாகா என்பது எமது மக்களின் காணிகளைத் அபகரிக்கும் திருட்டுக் குழு..!

வனவளத் திணைக்களம் என்பது மக்களின் காணிகளை அத்துமீறி அபகரிக்கின்ற ஒரு திருட்டுக் குழுவென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

அத்தோடு வனவளத்திணைக்களத்தின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா – செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 03.09.2026இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் வனவளத்தின் அபகரிப்பிலுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்படும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறிப்பாக தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இவற்றின் வரிசையில் வனவளத் திணைக்களமும் எமது மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபடுகின்ற ஒருதிணைக்களமாகும்.

இவ்வாறு மக்களின் காணிகளை மும்முரமாக அபகரிக்கின்ற திணைக்களங்களே ஆளும் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆப்பு வைக்கின்ற செயற்பாட்டைச் செய்யும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும், வன்னி மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றோம்.

இந்நிலையில் கடந்த 01.09.2026 அன்று இடம்பெற்ற வவுனியா நகர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும், ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டிருப்தை வரவேற்கின்றோம்.

குறிப்பாக வனவளத் திணைக்களத்தின் நிலஅபகரிப்பின் தீவிரத் தன்மையை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முல்லைத்தீவில் கடந்த காலத்தில் 2,22006 ஏக்கர் அடர்ந்த காடுகளே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு முல்லைத்தீவில் 4,32141ஏக்கர் நிலங்கள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறாக வனவளத் திணைக்களம் எமது மக்களின் காணிகளில் அத்துமீறி எல்லைக் கற்களையிட்டு ஆக்கிரமிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக மக்களின் நெற்செய்கைக் காணிகளும், உப உணவுப் பயிற் செய்கைக் காணிகளும் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டால் அந்தக் காணிகளுக்குரிய விவசாயிகள் என்ன செய்வது?

எனவே வனவளத் திணைக்களத்தின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கெதிராக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

எமது மக்கள் மண் வெட்டிபிடிக்காக சிறிய மரங்களை வெட்டும் போது, அவர்களுக்கெதிராக வனவளத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அதேவேளை கையூட்டுக்களைப் பெற்றுக் கொண்டு பாரிய வனப் பகுதிகளை அழிப்பதற்கு வனவளத் திணைக்களம் ஆதரவாகச் செயற்படுவதாகவும் எமக்கு மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

எனவே இந்தவிடயங்கள் தொடர்பிலும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க கூடுதல் கவனஞ் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். எமது வன்னிப் பிராந்தியத்தைக் காப்பாற்றுங்கள் என்றே நாம் கோருகின்றோம்.

வனவளத் திணைக்களத்திற்கு மக்களின் காணிகள் எதற்கு? எமது விவசாயிகளின் காணிகளை அவர்களிடமே வழங்குங்கள்.

வனவளத் திணைத்தினரா விவசாயம் செய்கின்றனர்? எமது மக்கள் தமது காணிகளில் விவசாயத்தை மேற்கொண்டு அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்துங்கள்.

வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கெதிராக அண்மையில் எதிர்ப்பு வெளியிட்டதைப் போன்று, வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கெதிரான நடவடிக்கைகளை செயலிலும் காண்பியுங்கள்.

வனவளத்திணைக்களம் மக்களின் காணிகளைத் திருடும் திருட்டுக் கூட்டம் எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!