முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், மருத்துவமனையின் அபிவிருத்திக் குழுவினருக்கும் வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட பொது மருத்துவமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்லத்தம்பி திலகநாதன், துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, மாவட்ட பொது மருத்துவமனைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை நியமித்தல், புதிய ஆளணி மீளாய்வுக்கு அமைவாகத் தேவையான மருத்துவர் ஆளணியை ஒதுக்குதல், நிரந்தரப் பொது மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய விசேட மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டிய தேவை என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தற்போது நிலவும் நிருவாக மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறைகள், அவற்றால் மருத்துவச் சேவைகளை வழங்குவதில் ஏற்படும் நடைமுறைச் சவால்கள் என்பனவும் கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உரிய தரத்திலான மருத்துவச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்காக, இனங்காணப்பட்டுள்ள ஆளணி மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளை சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.


Recent Comments