இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மோதலின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இல்லாமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் (Volker Türk) கவலை தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை பற்றிய தனது அண்மைய அறிக்கையில், சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், 2009 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான (LTTE) போரின் போது அனைத்துத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின்கீழான குற்றங்கள், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு எந்தவித அங்கீகாரமோ அல்லது பொறுப்புக்கூறலோ இருக்கவில்லை என்று துர்க் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால உரிமை மீறல்களுக்கு நீதியை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, 2024 செப்டம்பரில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நிலவும் மனித உரிமைகள் நிலையை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் (HRW) இதே போன்ற கவலைகளை எழுப்பியுள்ளது. சில உயர்மட்ட வழக்குகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் உள்ள போதிலும், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை, நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் மிகக் குறைந்த அளவிலான அல்லது எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.
சுயாதீன அரச வழக்கறிஞர் (Public Prosecutor) அலுவலகத்தை உருவாக்குவதற்கோ அல்லது பொறுப்புக் கூறலை வலுப்படுத்துவதற்கு தேவையான சட்ட மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கோ அளித்த வாக்குறுதியை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் HRW தெரிவித்துள்ளது.
மேலும், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சான்றுகளைப் பாதுகாப்பதற்காக ஐநா மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்ட ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை’ (Sri Lanka Accountability Project) அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைப் போராட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) தொடர்ந்து பயன்படுத்துவது குறித்தும் ஐநா அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் செயற்பாட்டாளர்களும் அரச உளவுத்துறையினரின் கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் தொடர்ந்து முகங்கொடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரை அதைப் பயன்படுத்து இடைநிறுத்துமாறும் (moratorium), அச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுமாறும் துர்க் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீண்டகாலமாக தாமதப்பட்டுள்ள சட்ட மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப் படுத்துமாறும், அடக்குமுறைச் சட்டங்களை நீக்குமாறும், விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும், உண்மையான நல்லிணக்கத்தை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்த அறிக்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால், தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கு மேலும் வலுப் பெறுவதோடு, போர் முடிந்து ஆண்டுகள் பல கடந்தும் பதில்களையும் நீதியையும் தொடர்ந்து தேடி வரும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியிலான நம்பிக்கை இடைவெளியை மேலும் ஆழமாக்கும் என அது எச்சரித்துள்ளது.


Recent Comments