ஐ.நாவின் (UN) தற்போதைய பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டரெஸின் (Antonio Guterres) பதவிக்காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த பொதுச் செயலாளரைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் மிகவும் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது.
வலுவான வீட்டோ அதிகாரங்களின் (Veto powers) செல்வாக்கு மற்றும் இரகசிய வாக்கெடுப்புகளுக்கு மத்தியில், அடுத்த ஐ.நா. பொது செயலாளரை தெரிவு செய்வதற்காக எட்டு வேட்பாளர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) பரிந்துரையை எதிர்பார்த்துப் போட்டியிடுகின்றனர்.

இப்போட்டிக்காக முக்கிய வேட்பாளர்களில் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் அபிவிருத்தி மாநாட்டின் (UNCTAD) தலைவரான கொஸ்டாரிகா நாட்டின் ரெபேக்கா கிரின்ஸ்பன் (Rebeca Grynspan), சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) ஆர்ஜென்டீனியத் தலைவர் ரபேல் குரொஸி (Rafael Grossi) மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் லானா நுசைப் (Lana Nusseibeh) ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இவர்களுக்கு மேலதிகமாக ஈக்வடோர், துருக்கி, கயானா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் பல வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
தெரிவு செய்யும் செயல்முறையும் பாதுகாப்புச் சபையின் வகிபாகமும்
பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களிடம் (சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா) ‘வீட்டோ அதிகாரம்’ உள்ளது.
பாதுகாப்புச் சபையினால் பரிந்துரைக்கப்படும் ஒரு வேட்பாளர் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படாமல் குறைந்தபட்சம் 9 வாக்குகளைப் பெற வேண்டும். அதன் பின்னர், குறித்த பெயர் பொதுச் சபையின் (UNGA) அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்படும்.
இதுவரை நடத்தப்பட்ட எட்டு இரகசிய மாதிரி வாக்கெடுப்புகளில் (Straw polls) எந்தவொரு வேட்பாளருக்கும் எதிர்ப்புகளின்றி பெரும்பான்மையான வாக்குகளை பெற முடியவில்லை.
எவ்வாறாயினும், அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பொன்றில் ரெபேக்கா கிரின்ஸ்பன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Recent Comments