யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி , குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த விபத்தின் போது வாகனத்தை செலுத்திய சாரதி தான் என பொலிஸாரிடம் சரணடைந்த நபர் மது போதையில் இருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , அவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சாவகச்சேரி பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் , மகனையும் கே.டி.எச் வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி மத்துவில் தெற்கை சேர்ந்த செல்வத்துரை செல்வராஜ் (வயது 51) அவரது மகனான செல்வராஜ் டிசாந்த் (வயது 09) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவத்தினை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் , வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில், வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அன்றைய தினம் இரவே மட்டுவிலை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தானே வாகன சாரதி என பொலிசாரிடம் சரணடைந்த நிலையில், அவரை கைது செய்து, சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், முதற் கட்டமாக மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

அதேவேளை விபத்து சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக, அன்றைய தினம் விபத்து நடைபெற்ற பகுதியை சேர்ந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கூடி கோரிக்கை விடுத்திருந்தனர்
அதன் போது, விபத்து இடம்பெற்றவுடன் ,வாகனத்தில் நிறை போதையில் இருந்த சாரதி உள்ளிட்டவர்கள் தப்பி சென்றதனை தாம் கண்கூடாக கண்டதாகவும், விபத்து நடைபெற்று சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு வந்த பொலிசார் வாகனத்தை அவ்விடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தி எடுத்து செல்ல முற்பட்ட போது, வாகனத்தின் திறப்பை காணவில்லை என தேடிய பொலிசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அதன் அடிப்படையில் வாகனத்தினுள் இருந்து “ரிமோர்ட் ஹீ”யை எடுத்து , வாகனத்தை அவ்விடத்தில் இருந்து எடுத்து சென்றனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் எவ்வித விசாரணைகளோ இன்றி வாகனத்தை பொலிஸார் ஏன் அப்புறப்படுத்தினர் என பொலிசாரிடம் அங்கு கூடியிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜனக சில்வா, வாகனத்திற்கு சேதம் விளைவிக்கப் படுவதற்கான ஏது நிலைமை காணப்பட்டமையால் பொலிஸார் வாகனத்தை எடுத்து சென்று இருக்கலாம்.
தொலைபேசி அடிப்படையில் வாகன திறப்பை பொலிஸார் அடையாளம் கண்டு எடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, அவ்வாறு நடந்திருந்தால் நிச்சயம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதேவேளை, வாகன விபத்து தொடர்பில் கண்கண்ட சாட்சியங்கள் இருந்தால், பயமின்றி பொலிஸ் நிலையத்தில் தமது வாக்கு மூலங்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , விபத்து இடம்பெற்ற நேரம் வாகனத்தினுள் இருந்த ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்
அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை விபத்து இடம்பெற்ற வேளை வாகனத்தினுள் இருந்த ஐவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர் விசாரணைகளின் போது , இன்றைய தினம் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவரே வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்தினார் எனவும், விபத்து நடைபெற்ற நேரத்தில் சரணடைந்தவர் சாரதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சாரதி ஆள் மாறாட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விடயத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேரடியாகத் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் .


Recent Comments