வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 24.01.2025இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றதாகவும் இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் 12பேரும், தேசிய மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மற்றும், மன்னார் இணைப்பாளர்களும் 24.01.2025இன்று பாராளுமன்றத்திற்கு வருகைதந்து வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட, பதினொரு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், உள்ளூர் மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.
அத்தோடு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப் படகுகளின் இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்புகின்றமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது பேசப்பட்டது.
இந் நிலையிலேயே வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுஒன்றை அமைப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.
(விஜயரத்தினம் சரவணன்)
Recent Comments