முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச, இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் யோஷித ராஜபக்ச இன்று (25.01.2025) மாலை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments