Saturday, January 24, 2026
Huisதாயகம்இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்..!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து இலங்கையில் உள்ள இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை தொடர்பான அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச்செய்கின்றன.மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் ஆதாரங்களை சேகரிப்பதற்கான சுயாதீன அமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும், வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்களை ஏற்படுத்தும் விதத்திலும் தீர்மானங்களில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

பாதுகாப்பு அபிவிருத்தி தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தையும் அரச திணைக்களங்களையும் பயன்படுத்துவதையும் முன்னைய தீர்மானங்கள் கருத்தில் கொள்ள தவறிவிட்டன என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகம் ஆகியவை குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் காணப்படுவது குறித்த எங்கள் கரிசனையை வெளியிட்டிருந்தோம். இரு அலுவலகங்களும் அவை உருவாக்கப்பட்ட நோக்கம் அவற்றின் கட்டமைப்பு ஆகியவற்றில் தவறுகளை கொண்டவையாக காணப்படுகின்றன.

இதேவேளை தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கான ஆரம்புள்ளியாக கூட 13வது திருத்தத்தை நாங்கள் ஏற்க தயாரில்லை என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகி விட்டது. எங்களின் எச்சரிக்கைகள் ஒவ்வொன்று சரியானவை என்பது நிரூபணமாகியுள்ளது.

அரசியல் கைதிகளை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டம் நீதியானது இல்லை அதனை நீக்கவேண்டும் என நீதியமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர்.

இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னைய தீர்மானங்களை, இலங்கை விவகாரத்தில் தலையிடுபவை, அரசியல் நோக்கம் கொண்டவை என நிராகரித்துள்ளதுடன் உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் நாங்கள் இந்த விடயத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்ட, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும், புதிய தீர்மானம் அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!