Friday, January 23, 2026
Huisதாயகம்ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் - மஹிந்த ஜயசிங்க

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் – மஹிந்த ஜயசிங்க

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார்.

அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். வெகுவிரைவில் முரண்பாடற்ற வகையில் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கல்விக்கு என்றும் முன்னுரிமை வழங்குவோம் என்பதை அதிகாரத்தில் இல்லாத போதும் குறிப்பிட்டோம், தற்போதும் அதே நிலையில் உள்ளோம். இந்த ஆண்டு ஆசிரியர் சேவையில் 7913 நியமனங்கள் வழங்கப்படும்.

அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சேவை தொடர்பில் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே செயற்பட முடியும்.

அதிபர் சேவையில் 1610 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் நிர்வாக மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதேபோல் கல்வி நிர்வாக சேவையில் 1331 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் 422 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதவிக்கான பரீட்சை நடைபெற்றது. இருப்பினும் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஆசிரியர் கல்வி சேவையில் 1310 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் முதல் கட்டமாக 706 பேருக்கு நியமனங்களை வழங்குவற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் இழுபறி நிலையில் இருந்த விடயங்களை நாங்கள் துரிதப்படுத்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் பெரும்பாலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் என்று பெயர் பலகைகளில் ஊடாக மாத்திரம் அறிவிக்கப்பட்டது.இருப்பினும் எவ்வித வளங்களும் வழங்கப்படவில்லை. அனைத்து பாடசாலைகளுக்கும் இணையான வளங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பொய்யுரைத்தார்கள். பி.சி பெரேரா ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக 1997 ஆம் ஆண்டு ஆசிரியர் – அதிபர் சேவை சம்பள முரண்பாடு ஆரம்பமானது. 27 ஆண்டுகாலமாக இந்த பிரச்சினை தொடர்கிறது. 8 ஆண்டுகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியும், 19 ஆண்டுகாலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இந்த நாட்டை ஆட்சி செய்தது.இருப்பினும் இந்த முரண்பாட்டுக்கு தீர்வு காணவில்லை.

நாங்கள் தொடர்ந்து போராடினோம் . 2021 ஆம் ஆண்டு 121 நாள் போராட்டத்தில் பின்னரே ஒரு பகுதியளவிலான வெற்றியை பெற்றுக் கொண்டோம். 1994 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பினை தயாரிக்கையில், பல நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டு அவை முழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், அமைச்சரவை பத்திரம் ஊடாக தற்காலிக தீர்வுகள் எடுக்கப்பட்டன.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார்.அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள தமிழ்பொறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!