கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, காவல்துறை விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய மாணவியின் பெற்றோரும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் காவல் துறைக் குழுக்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் பாடசாலையிலும், பயிற்சி வகுப்பிலும் குறித்த மாணவிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, துல்லியமான மற்றும் விரைவான விசாரணைகளை நடத்துமாறும் பிரதமர் காவல்துறை விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவம் பதிவாகிய போது எடுக்கப்பட்ட நடவடிக்கை செயல் திறனானதா என்பது குறித்து கல்வி அமைச்சு, உள்ளக விசாரணையை நடத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் தலையிட வேண்டிய அரசு, நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் மோசமான மட்டத்தில் உள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
எனவே, அந்த பொறிமுறையை கண்காணித்து அதை நெறிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூவர் அடங்கிய குழாம் ஒன்றையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமித்துள்ளார்.


Recent Comments