Friday, January 23, 2026
Huisதாயகம்மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் விடயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது..!

மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் விடயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது..!

மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களும், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளூம் சமூகத்தைப் பயமுறுத்தி வருகின்றனர். சட்டத்தின் ஆட்சி இன்று சமூகத்தில் இல்லாத நிலையே காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய வலுவான பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தத் தவறிவிட்டது.

இவ்வாறு நாட்டில் இருக்கும் இளைஞர்களை நாம் இழக்கும் போது, ​​கொலையாளிகள் மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் மனித உயிர்கள் இழக்கப்படும் போது, ​​தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய அம்சமாக அமைந்து காணப்படும் வாழும் உரிமையை உறுதி செய்யத் தவறிவிட்டது. கொலைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அரசாங்கம் பல்வேறு புள்ளி விவரங்களைக் காட்டினாலும், இந்த மனித உயிர்களை வெறும் புள்ளிவிவரங்களுடன் சுருக்கிக் கொள்ள முடியாது. இந்த மனித உயிர்களின் மதிப்பை பணத்தை வைத்தும் அளவிட முடியாது.

கொலைகாரர்களின் அச்சுறுத்தல்களால் முழு சமூகமும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்திடமிருந்து இதற்கான தீர்வுகளும் பதில்களும் தேவை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று, ஐஸ் போதைப்பொருள் சமூகத்தில் பரவலாக வியாபித்து காணப்படுகின்றது. இளைஞர்கள் மட்டுமல்லாது, பாடசாலை மட்டத்திலும் கூட இந்த போதைப்பொருள் பரவி காணப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு இளம் தலைமுறையினரை இழந்து வருகிறது.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். இவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான சவாலாக அமைந்து காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில்கள் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.

பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு காணப்படும் தட்டுப்பாடு, மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலன்புரி சார் விடயங்களில் நடக்கும் வெட்டுக்கள் போலவே மறுபுறம் கொலை கலாச்சாரத்தால் உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் சந்தர்ப்பங்களில், ​புள்ளிவிவரங்களை முன்வைத்து, இவை சாதாரண கொலைகள் என்று அரசாங்கம் பிரஸ்தாபித்து வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் தரப்பினர் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்தனர்.

மக்களுக்கு இவ்வாறு கூறியே ஆட்சிக்கு வந்தனர். அவர்களால் முறைமையில் மாற்றத்தை கொண்டு வர முடியாது போயுள்ளது. தேசிய பாதுகாப்பு, குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வாழும் உரிமையை உறுதி செய்வதற்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவோம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!