Thursday, July 3, 2025
Huisதாயகம்இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது - சஜித்

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது. நாட்டில் சிறிது காலமாகவே தொடர்ச்சியாக கொலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி, அறிவுறுத்தல் விடுத்தும், இந்த விடயத்தில் அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை.

நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை குறைப்பது எதிர்ப்பது குறித்து அரசாங்கத்திற்கு எந்த யோசனையும் இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எந்த வேலைத்திட்டமோ அல்லது தொலை நோக்குப் பார்வையோ இல்லாததொரு அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பாதாள உலகக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், பல்வேறு அடக்குமுறை கும்பல்கள், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் கும்பல்கள் இந்நாட்டில் தொடர்ந்து கொலைகளைச் செய்து வருகின்றன. இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சமூகத்தில் வாழும் உரிமை இல்லாது போயுள்ளது. வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ராமஞ்ஞ மஹா பீடத்தினால் இரு வருடங்களுக்கு ஓரு முறை நடத்தப்படும் உபசம்பதா புண்ணிய நிகழ்வு இன்று (03) அநுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் இடம்பெற்றது. 74 ஆவது தடவையாக இடம்பெற்ற இவ்வருட நிகழ்வில் 400 பிக்குகள் உபசம்பதா பெற்றனர். இப்புண்ணிய இந்நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆபத்தில்.

தேசிய பாதுகாப்பு குறித்து டியூசன் எடுப்போம் என வீராப்பு பேசிய அமைச்சர்களால், தற்போது இயலாமைக்கு மத்தியில் இருந்து வரும் அரசாங்கத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாதுபோயுள்ளது. அரசாங்கம் மெத்தனப் போக்குக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தப் படுகொலைகளும் துப்பாக்கிச் சூடுகளும் நிகழ்ந்து வரும் சந்தர்ப்பத்தில், ​​இச்சம்பங்கள் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்காது என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

வீடுகளிலும், வீதிகளிலும், வேலைத்தளங்களிலும், நீதிமன்றத்திலும் கூட துப்பாக்கிச் சூடு நடக்கும் நிலைக்கு நாடு வந்துள்ளது. இதைத் தடுக்க அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லாமையினால் காட்டுச் சட்டமே கோலோச்சி காணப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி இல்லாது போய், கொலை செய்யும் கலாச்சாரம் பரவி காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்.

இன்று நாட்டு மக்கள் அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருகின்றனர். மிகுந்த அதிர்ச்சிக்கு மத்தியில் இருந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தால் எந்தத் தெளிவான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதுபோயுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் பலவீனமான அரசாங்கமாக காணப்படுகின்றது.

தாம் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட மீறிய இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கைக் கூட சரியாக பாதுகாக்க முடியாதுபோயுள்ளது. எனவே, தூங்கிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

இன்று விவசாயிகளுக்கு அதோ கதிதான்!

புதிய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கிடைத்தபாடில்லை. விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியை நிராகரித்து தற்போதைய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்த அரசாங்கம் இன்றுவரையில் விவசாயிகளை தோல்விக்கே ஈட்டுச் சென்றுள்ளது.

உயர்தரத்திலான விதைகள், உயர்தரத்திலான உரங்கள் கூட அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. விவசாய உபகரணங்களுக்கு செலவிடும் தொகை கூட அதிகரித்து காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளை கவனிப்பதை விடுத்து அரசாங்கம் குரங்களை கணக்கெடுத்து வருகிறது.

நெல்லுக்கு நிலையான விலையைப் பெற்றுத் தருவோம், அதற்கான சட்டமூலத்தை கொண்டு வருவோம் என தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பேசினர். ஆனால் விவசாய அமைச்சர் குரங்குகளுக்குப் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்.

அதிக நிதிகளை ஒதுக்கி, குரங்குகள் தொடர்பான போலியான கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளார். ஆனால் விவசாயிகளுக்கு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்ல. நியாயமான விலையில் உரத்தைக் கூட இந்த அமைச்சாரால் பெற்றுக் கொடுக்க முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றவர்கள் இன்று அரிசியை இறக்குமதி செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று உறுதியளித்த அரசாங்கம், தற்போது வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சுமார் 40,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது.

உப்பு முதல் அரிசி வரை எழுந்த சகல பிரச்சினைகளையும் தீர்க்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது. மக்களின் நாளாந்த வாழ்க்கையை வீழ்ச்சியின் பால் இட்டுச் சென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் மக்களுக்காகவே குரல் எழுப்பி வந்தது.

நாட்டு மக்கள் யதார்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர்களை நியமிக்கும் நடவடிக்கையில் ஆளும் தரப்பு அழுத்தம் பிரயோகித்து வந்தமை தொடர்பிலும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உண்மை ஒரு நாள் வெல்லும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!