ஏதேனுமொரு முறைப்பாடு சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்காக ஒருவரை அழைக்கும்போது முறைப்பாட்டில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் குறித்த நபருக்கு தெளிவுபடுத்த வேண்டிய விதம் குறித்து வழிகாட்டல்களை வழங்கும் சுற்றுநிரூபம் பதில் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிரூபம் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி நிபுணரான விதுர ருலபனாவ என்பவரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று(04) அழைக்கப்பட்ட போதே சட்ட மாஅதிபர் மன்றுக்கு இதனை தெரியப்படுத்தினார்.
அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு இன்று(04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தாம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டுமென குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரினால் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டதாக மனுதாரர் மன்றில் குறிப்பிட்டார்.
பின்னர் தமக்கு எதிரான முறைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்ன என்றும் பொலிஸாரிடம் தாம் வினவிய போதிலும் அதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்ததாகவும் மனுதாரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவ்வாறு தகவல் வழங்க மறுப்பு தெரிவித்ததன் ஊடாக பிரதிவாதியான பொலிஸ் அதிகாரிகள் தமது அடிப்படை உரிமையை மீறியதாக தீர்ப்பளிக்குமாறு கோரி மனுதாரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்ட கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வழங்கிய சமர்ப்பணங்களுக்கு அமைய சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டு நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும் இதற்கமைய மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்ய முடியுமெனவும் மனுதாரர் சார்பில் ஆஜராக சட்டத்தரணி நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.
இதற்கமைய மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த மனுவில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர், அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை அல்லது சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கின்ற போது,
பொலிஸ் தான்தோன்றித்தனமாக, எவ்வித விபரங்களையும் வெளியிடாமல், “விசாரணைக்கு வாருங்கள்” என அறிவிப்பது அன்றாடம் நடைபெற்று வருகின்றது. அறிவித்தலில் விசாரணை குறித்து போதுமான விபரங்கள் வழங்கப்படாதவிடத்து, அது தொடர்பில் அறிவியுங்கள்.
பல சந்தர்ப்பங்களில், தொல்பேசியினூடாக இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அழைக்கின்ற பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரையோ, விசாரணை தொடர்பான விபரங்களையோ வழங்காது, குறித்த திகதியில், குறித்த நேரத்திற்கு, குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிப்பதனை நடைமுறையாகப் பின்பற்றி வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரியின் பெயர், அவரது தொடரிலக்கம், விசாரணை குறித்த விடயங்கள் ஆகியவற்றை வழங்காதவிடத்து அத்தகைய அழைப்புகளை உதாசீனம் செய்யுங்கள். இவ்வாறான அழைப்புகள் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் காரணமாகவும், மற்றத் தரப்பினருடான பொலிஸினுடைய ‘உறவின்’ காரணமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிய வழிகாட்டுதல்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன:
1. சந்தேக நபர்களுக்கு அழைக்கப்படும்போது குறிப்பிட்ட குற்றங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.
2. சாட்சிகளுக்கு அவர்களின் வாக்குமூலத்தின் நோக்கம் மற்றும் வாக்குமூலத்திற்கும், முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணைக்குமான பொருத்தப்பாடு (relevance) குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.
3. சந்தேக நபர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத காரணங்களுக்காக அழைக்கப்பட்ட நபர்களுக்கு கோரிக்கைக்கான போதுமான காரணம்/பின்னணி வழங்கப்பட வேண்டும்.
4. தொலைபேசி மூலம் அழைப்பணை (summons) அனுப்பப்பட்டால், பொறுப்பதிகாரி மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
5. விசாரணை தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத பிற தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளும் போது, குறிப்பாக அவைவாறு தகவல்களைப் பகிர்தல் வழக்கினைப் பாதிக்கக் கூடும் என்றால், அதிகாரிகள் இரகசியத் தன்மையைப் பேண வேண்டும்.
Recent Comments