Wednesday, December 3, 2025
Huisகட்டுரைகள்கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலையை நோக்கி பயணிக்கும் தமிழரசு கட்சி..!

கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலையை நோக்கி பயணிக்கும் தமிழரசு கட்சி..!

இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 58 சபைகளில் போட்டியிட்டது. இதில் 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம். மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46இல் எமது இலக்கை அடைந்துள்ளோம்.

மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம். இது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி என அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பெருமிதப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், 58 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளதாக பொதுவாக கூறும் சுமந்திரன் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் மூவினங்களும் வாழ்கின்ற நிலையில், வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கைப்பற்றிய போதும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மன்னார் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியினால் ஏன் ஒரு சபையைக் கூட கைப்பற்ற முடியவில்லை?

இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் 3 மாவட்டங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், தனித் தமிழரசின் ஆட்சி அமைக்கும் விதத்தில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கிளிநொச்சிக்குத் தலைமை வகிக்கும் சிறீதரன் எம்.பி, முல்லைத்தீவிற்குத் தலைமை வகிக்கும் ரவிகரன் எம்.பி, மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் ஆகியோருடன் தமிழரசின் தலைமை வன்மம் கொண்டு மூவரையும் பழிவாங்கும் நோக்குடனும் கட்சியிலிருந்து ஒதுக்கும் வெளியேற்றும் திட்டத்துடனும் செயற்படுவது தமிழரசின் அரசியலையே முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்பதனை தமிழரசின் தலைமைகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

தமிழரசு வெற்றி கொண்ட முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் தான் பெயரிடுபவர்களையே தவிசாளர்களாக பிரதி தவிசாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற சுமந்திரனின் சர்வாதிகாரத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரவிகரன் எம்.பி மற்றும் மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் அந்தப் பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து ஒதுங்கியுள்ளார்.

தற்போதைக்கு தமிழரசுக்கு நெருக்கடிகள் ஏற்படாது விட்டாலும் இனி வரும் தேர்தல்களில் அதற்கான விளைவுகளைத் தமிழரசு கட்சி எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

அதேபோன்று, சிறீதரன் எம்.பியின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசின் ஆட்சியமைந்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள சிறீதரனின் தீவிர விசுவாசியை அப்பதவியிலிருந்து அகற்றத் தமிழரசின் தலைமை திட்டமிட்டுள்ளது.

இது அந்த தவிசாளருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல தமிழரசுக்குள் இருந்து கொண்டே தமிழரசின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டைக் கடுமையாக எதிர்க்கும், பகிரங்கமாக விமர்சிக்கும் சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே தமிழரசின் தலைமையால் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே ஏலவே பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை இழந்துள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும், பல சபைகளை இழந்துள்ள தமிழரசுக் கட்சி, தன்னை மீண்டும் வலிதாக்கிக் கொள்ள கட்சிக்குள் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பலப்படுத்தி அனைவரையும் ஒரே வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டுக் கொடுப்புத் தன்மைகளுடன் தமிழரசின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

எனினும் இந்த நேரத்தில் தலைக்கனம், வறட்டுக் கெளரவம், பிடிவாதம், நான் என்ற அகங்காரம் போன்றவற்றால் கட்சிக்குள் பிளவுகளை, குழப்ப நிலைகளை, பழிவாங்கல்களை, பதவி நீக்கங்களை, கட்சி நீக்கங்களை மேற்கொண்டால் தமிழர்களின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி விரைவில் காணாமல் போய்விடும் என்பதனை தமிழரசின் புதிய தலைமைகள் சற்றேனும் தமிழர் நலன் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தவறின், தந்தை செல்வா, “கடவுளாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது” என்று கூறியதை “கடவுளாலும் தமிழரசுக் கட்சியை காப்பாற்ற முடியாது” என்று கூற வேண்டிய நிலையே ஏற்படும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!