வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு உயிரிழந்த பொதுமகனின் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு நீதவான் திகதி அறிவித்துள்ளார்
சம்பவ இடத்துக்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட வவுனியா நீதவான், கள விசாரணைகளை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், உயிரிழந்த பொதுமகனின் உடலத்தில் எவ்வித வெளிப்புற காயங்களும் இல்லை என நீதவான் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
இந்தநிலையில், சட்ட மருத்துவ அதிகாரியின் ஊடாக, உடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனையை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளுமாறு நீதவான் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த 59 வயதான பொதுமகனின் உடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா – கூமாங்குளம் பகுதியில் பொதுமகன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்ததை அடுத்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் போது, காயமடைந்ததாகக் கூறப்படும் ஐந்து காவல்துறையினரும் தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில், இருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வவுனியா தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி கூறினார். ஏனைய மூவரும், சாதாரண காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recent Comments