Saturday, January 24, 2026
Huisதாயகம்வவுனியா மடுவம் சர்ச்சை; சிலர் மக்களுக்காக அல்ல மாடறுக்கவே சபைக்கு வந்துள்ளனர்..!

வவுனியா மடுவம் சர்ச்சை; சிலர் மக்களுக்காக அல்ல மாடறுக்கவே சபைக்கு வந்துள்ளனர்..!

வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கு பல பிரச்சனைகள் உள்ளது. இதனை அரசியலாக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே என்று வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவத்தில் தற்போது ஏற்ப்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக கருத்து கேட்ட போது முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மின்சாரசபையால் இதுவரை அனுப்பப்பட்ட பட்டியலுக்கு அமைய திங்கட்கிழமை நிலுவையிலுள்ள மின் கட்டணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அந்த செயற்பாடுகளை சபையின் நிர்வாக அதிகாரியே செய்கின்றார். இதனை அரசியலாக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே.

தாண்டிக்குளம் மாடு அறுக்கும் மடுவத்தில் அதிகமான மாடுகள் அறுக்கப்படுகின்றது. அவை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் எமது மாவட்டத்தில் மாடுகளின் விலை அதிகரித்துள்ளது.

கால்நடைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்களின் வாழ்வாதாரத் தேவைக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் கூடக் திருடப்படுகின்றது. அண்மையில் கூட ஓமந்தையில் ஒருவருக்கு சொந்தமான 20 மாடுகள் களவாடப்பட்டுள்ளது. எனவே இவற்றை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டும்.

அத்துடன் மடுவத்தில் அறுக்கப்படும் ஒருகிலோ மாட்டு இறைச்சிக்காக சபைக்கு 10 ரூபாவே கட்டணமாக செலுத்தப்படுகின்றது. கடந்த 25 வருடங்களாக இந்த தொகையே அறவிடப்படுகின்றது. ஆனால் தேறிய இலாபமாக குறைந்தது கிலோக்கு 800ரூபாயை அவர்கள் பெறுகின்றனர்.

எனவே இவற்றை திருத்தி சபையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் பர்ஸ்சானின் நடவடிக்கை தொடர்பாக மாநகரசபையின் அடுத்த அமர்வில் கூடி கலந்துரையாடப்பட்டு ஒழுக்காற்று முடிவுகள் எடுக்கப்படும்.

ஒரு மாநகரசபை உறுப்பினர் சபையின் வியாபாரத்தை தன்னுடையது என்று சொல்லி செய்ய முடியாது. சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் எடுப்பதற்கு முன்னரே அவர் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆகவே அவர் மக்களுக்கான பிரச்சினைக்காக அல்ல, தனது வர்த்தகத்திற்கு மாடுகளை வெட்டுவதற்காகவா மாநகரசபைக்கு வந்துள்ளார் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!