Saturday, August 2, 2025
Huisதாயகம்தமிழர் அடைக்கப்பட்ட சிறைச் சுவரில் இருந்த முகவரி; கடற்படை தளபதி சிக்கியது இப்படித்தான்..!

தமிழர் அடைக்கப்பட்ட சிறைச் சுவரில் இருந்த முகவரி; கடற்படை தளபதி சிக்கியது இப்படித்தான்..!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஒருவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் ஜூலை 30 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிஐடி நடத்திய நீண்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த சாந்த சமரவீர ஆவார். அவர் கடத்தப்பட்டு, காணாமல் போன சம்பவம் பற்றிய வழக்கு தற்போது பொல்கஹவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

சாந்த சமரவீரவின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக கடற்படை அதிகாரி சுமித் ரணசிங்க என்பவர் முன்னர் கைது செய்யப்பட்டார்.

கடத்தப்பட்ட நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தக் குற்றம் நடந்த போது உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதி கொலைக்கு உதவி செய்தல் மற்றும் தூண்டுதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாந்த சமரவீர திருகோணமலையில் உள்ள கன்சைட் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டார் என்றும், அப்போது கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த நிஷாந்த உலுகேதென்ன இதற்கு உதவியதாகவும், இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத தடுப்பு மையம் உலுகேதென்னவின் மேற்பார்வையின் கீழ் இயங்கியதாக சிஐடி சந்தேகிக்கிறது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்திய போது, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கன்சைட் முகாமில் உள்ள சுவரில் எழுதப்பட்ட ஒரு முகவரியைக் கண்டுபிடித்தனர்.

அது ஒரு சோப்புத் துண்டினால் எழுதப்பட்டிருந்ததும், சம்பந்தப்பட்ட முகவரியில் வசித்த ஒருவரின் கையெழுத்துடன் ஒப்பிடும் போது, அது அதே நபருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

கடத்தப்பட்ட நபர் இந்த சட்டவிரோத தடுப்பு மையத்தில் பல நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சிஐடியினர் சந்தேகிக்கிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!