Thursday, July 31, 2025
Huisதாயகம்தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு 3 அரசியல் கட்சிகள் ஆதரவு..!

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு 3 அரசியல் கட்சிகள் ஆதரவு..!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை தொடர்பான விவாதத்தின் போது 3 அரசியல் கட்சிகள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அதன்போது பொதுஜன பெரமுன கட்சி அந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி அது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்று (28) கருத்து தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஓரிரு தினங்களில் கட்சி கூடி அதற்கான முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,

”தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பைத் தெரிவித்து வரும் கட்சி என்ற வகையில் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனத்திற்கும், போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கும் தமது கட்சி ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த அனைத்து காரணங்களையும் முன்வைத்து மேற்படி யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக் கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் நடவடிக்கை முறைசட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை ஓகஸ்ட் 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த யோசனை தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!