மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு ஒன்று 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிலர் சாட்சியமளித்திருந்தனர்.
அத்துடன் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்கு முன்னிலையாகுமாறு 2019 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
எனினும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிமன்றுக்கு செல்ல முடியவில்லை என்பதனை குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரணைக்குட்படுத்திய மேன்;முறையீட்டு நீதிமன்றம், யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கோட்டபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து ரிட் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று யசந்த கோதாகொட குமுதினி விக்ரமசிங்க ஷிரான் குணரட்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டார்
இன்றில் இருந்து நான்கு வாரங்களுக்குள் யாழ் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து உத்தரவுகளை பெறுமாறு சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
அத்துடன் தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இதனால் குறித்த வழக்கின் விசாரணையை நிறைவுக்கு கொண்டுவருமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் மனுதாரர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போப்பகே இந்த கோரிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
Recent Comments