தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் : சுதீஷ் சங்கர்
நடிப்பு : வடிவேலு, பஹத் பாசில், விவேக்பிரசன்னா, சித்தாரா, கோவை சரளா
இசை : யுவன்சங்கர்ராஜா
ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி
வெளியான தேதி : ஜூலை 25.20.25
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
அல்சைமர் என்ற ஞாபக மறதிநோயால் அவதிப்படும் வடிவேலுவின் வங்கி கணக்கில் ரூ 25 லட்சம் இருப்பதை அறிந்த திருடனான பஹத் பாசில், அதனை அபகரிக்க அவர் பின்னாலேயே சுற்றுகிறார். வடிவேலு வைத்திருக்கும் ஏ.எடி.எம் இலக்கத்தை பஹத் பாசில் தெரிந்து கொண்டாரா? பணத்தை வடிவேலு இழந்தாரா என ஆரம்பிக்கிறது கதை. ஆனால், இடைவேளைக்குபின் வடிவேலு கதாபாதிரத்தில் அதிரடி மாற்றங்கள். சில ‘சம்பவங்களை’ செய்கிறார். உண்மையில் வடிவேலு யார்? வடிவேலு, பஹத் பாசில் உறவு எப்படி முடிகிறது என்பது மாரீசன் கதை.
இத்திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார். கிருஷ்ண மூர்த்தி இத் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.
பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து விடுதலையாகும் திருடனான பஹத் பாசில், நாகர்கோவிலில் ஒரு வீட்டில் திருட நினைக்கிறார். அங்கே இருக்கும் ஞாபக மறதிக்காரரான வடிவேலு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபகரிக்க நினைக்கிறார். அதற்கு அவரின் ஏடிஎம் அட்டையின் இரகசிய இலக்கம் தேவைப்படுகிறது. அதை தெரிய வடிவேலு சொல்படி திருவண்ணாமலை, கோவை என அவருடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுகிறார். இப்படி பயணத்திலேயே முதற்பாதி முடிந்துவிடுகிறது.
அடுத்த பாதி கதை வேறு மாதிரி நகர்கிறது. வடிவேலுவின் உண்மையான குணம், அவர் நோக்கம் வெளிப்படுகிறது. பின்னர் திரைப்படத்தின் இறுதியில் இன்னொரு டிவிஸ்ட் என ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது மாரிசன்.
சற்றே வயதான வேடத்தில், தனக்கே உரிய, வழக்கமான உடல் பாவனை, டயலாக் டெலிவரி, நகைச்சுவை என எதையும் வெளிப்படுத்தாமல் கதைக்கு தக்கபடி நடித்து இருக்கிறார் வடிவேலு. கலகலவென, காமெடி செய்யும் வடிவேலுவை இப்படி பார்ப்பது முதலில் வித்தியாசமாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் அவரின் கதாபாத்திரத்துடன் ஒன்றி விட, நாமும் அவரை பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக, வடிவேலு ஞாபகமறதியால் அவர் தவிக்கும் காட்சிகள் , இடைவேளைக்குபின் வேறு மாதிரி மாறும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.
வடிவேலுவுக்கும், அவர் மனைவியாக வரும் சித்தாராவுக்குமான பாசப்பிணைப்பு அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியில் பெண் குழந்தைகள் மீதான பாசம், பரிதவிப்பில் அவர் பேசும் வசனங்களும், செயல்களும் இயக்குனரின் சமூக அக்கறையை காண்பிக்கின்றன. மனைவிக்காக வடிவேலு எடுக்கும் முயற்சிகள் உணர்ச்சி பூர்வமானவை, கொஞ்சம் கோபமானவை.
திருடனாக வரும் பஹத் பாசில் நடிப்பு தான் படத்தின் பெரிய தூண் எனக் கூறலாம். முதற்பாதி முழுக்க அவர் கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பஹத். என்ன, இன்னுமும் அவர் பேச்சில் அதிக மலையாள வாடை. சில வார்த்தைகள் புரிய கஷ்டமாக இருக்கிறது. வடிவேலுவை ஏமாற்ற அவர் நடிப்பதும், ஒரு கட்டத்தில் அவர் யார் என்பதை உணர்ந்து தவிப்பதும் சிறப்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளன.
வடிவேலு மனைவியாக சில காட்சிகளில் மாத்திரம் வந்தாலும் ‛புது வசந்தம்’ சித்தாரா மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, பஹத் அம்மாவாக வரும் ரேணுகா, பொலிஸ் அதிகாரியாக வரும் கோவை சரளாவுக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை. நடிப்பில் அவ்வளவு செயற்கைதனம். வடிவேலு நண்பராக வரும் லிவிஸ்டனும் நடித்து கொட்டுகிறார். சின்ன கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, இறுதியில் மிரட்டியிருக்கிறார் விவேக் பிரசன்னா. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை கொண்டாடும் அளவுக்கு இல்லை.
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். வில்லனாக காட்டப்படும் சிலரின் பின்னணி குறித்து விரிவான காட்சிகள் இல்லை. சில வசனங்களின் மூலம் அவர்கள் பிளாஷ்பேக்கை சொல்கிறார்கள், ஒருவகையில் அது குடும்பத்தினருடன் பார்க்க வைக்ககூடிய வகையில் தான் அமைந்துள்ளது.
முதற்பாதி நகைச்சுவை, பிற்பாதி திருப்பங்கள், திரில்லர் என வேறு திசைக்கு நகர்கிறது. பொலிஸ் விசாரணையில் பல லாஜிக் சொதப்பல்கள். படத்தின் தலைப்புக்கும், கதைக்குமான தொடர்பு பலருக்கு பிடிபடவில்லை.
ஞாபக மறதி விஷயத்தில் வரும் டுவிஸ்ட், வடிவேலுவின் கிளைமாக்ஸ் செயல்பாடுகள், சித்தாரா போர்ஷன் ஆகியவை டச்சிங் என்றாலும், அந்த பயணம் இழுத்துக்கொண்டே போவதை எடிட் செய்து இருக்கலாம். பல கசாட்சிகளில் பஹத் பாசில், வடிவேலு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.
நகைச்சுவை திரைப்படத்தை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமாக இருக்கும், கதையை நம்பி வந்தால் ஏமாற்றம் கிடைக்காது. ஒட்டு மொத்தத்தில் அழுத்தமான மலையாள படம் பார்த்த மாதிரி இருக்கிறது, வடிவேலு சிறந்த குணசித்திர நடிகராக மாறியிருக்கிறார்.
வடிவேலுவை வைத்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற விழிப்புணர்வு கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் பேசுவதை கவனிங்க. அவங்க சோகமாக இருந்தால், மனம் விட்டு பேசுங்க என்ற கருத்து இன்றைக்கு தேவையான ஒன்று. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், அந்த குடும்பத்தினர் வலியை, வடிவேலு மாதிரியான நடிகரை வைத்து சீரியசாக கதை சொல்லியிருப்பதும் இயக்குனர் தைரியத்தை, ஸ்கிரிப்ட் மீதான நம்பிக்கையையும் காண்பிக்கிறது.
Recent Comments