காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் காலத்தில் விடிவு கிடைத்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல் முறையாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் இன்று புதன் கிழமை (13.08.2025) காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பளை மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, கடற்றொழில், நீரியல்வள அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள், சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Recent Comments