2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் (Online Safety Act, No. 9 of 2024) திருத்துவது குறித்த அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிக்க அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் உட்பட பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவுக்கு இணங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர், நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் 2024 ஜூலை 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தங்களை பரிசீலிக்கவும், பொதுமக்களின் ஆலோசனையைப் பெற்று, தேவையான பரிந்துரைகளை வழங்கவும் ஒரு குழுவை நியமித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று முதல் ஒரு மாத காலப் பகுதிக்குள் நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்து பொது மக்களிடமிருந்து அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு கோரியுள்ளது.
ஏதேனும் அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் அல்லது யோசனைகளை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழுவுக்கு அனுப்ப முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தபால் மூலமாக அனுப்புவதாயின், கடித உறையின் மேல் இடது மூலையில் “2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு” என்று குறிப்பிடப்பட்டு செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, இல. 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அத்துடன் “2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு” என்ற தலைப்பின் கீழ் legal@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் சமர்ப்பிப்புகளைச் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recent Comments