சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் கடையடைப்பு அறிவிப்பு தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஊடகங்கள் முன்னிலையில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (18) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
“ஹர்த்தால் நிலவரம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
வர்த்தக சங்கத்தின் போசகரும், ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன் அவ்விடத்தில் வருகை தந்து கருத்துக் கூறிய போது தலைவருக்கும் மற்றும் போசகருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த வர்த்தக சங்க தலைவர், “போசகர் தேர்தலில் படு தோல்வி அடைந்தவர். அவர் தற்போது இந்த இடத்தில் கூக்குரல் இடுவது எவ்விதத்திலும் நியாமில்லை.
சுமந்திரனை பின்கதவால் கூட்டி கொண்டு வந்தவர் இவர்தான், இவர் தான் சங்கத்தின் போசகர் எனவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறி கூறுவது வேடிக்கை. ஆகையால் எமது வர்த்தக சங்க போசகர் என்ற மனநிலையில் இருந்து பேச சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த போசகர் செந்தில்நாதன் மயூரன், “நாங்கள் ஹர்த்தாலுக்கு அறிக்கை விட்டுள்ளோம். சுமந்திரனை நான் தான் வர்த்தக சங்கத்திற்கு கூட்டி வந்தேன், ஊடக அறிக்கை விடுமாறு எந்த தீர்மானமும் சங்கத்தில் எடுக்கவில்லை. ஒரு கட்சியின் பின்னனியில் இயங்குபவரே சங்கத் தலைவர், அவர் தன்னிசையாக தீர்மானம் எடுக்க முடியாது.
இது வர்த்தக சங்கம் என்பது வவுனியா நகரத்திற்குள் உள்ள ஒரு சங்கமே தவிர வவுனியாவுக்கானது அல்ல நெடுங்கேணி, செட்டிகுளம், பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் என பிரதேச ரீதியாக வர்த்தக சங்கங்கள் இருக்கும் போது இது வவுனியா மாவட்டத்திற்கான வர்த்தக சங்கம் என எப்படி இதனைப் பயன்படுத்த முடியும்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


Recent Comments