கண்டியில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை திருடி, அதனை அடகு வைத்துப் பெற்ற பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி தனது காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, மாதிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்டி – டி.எஸ். சேனாநாயக்க வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி இரவு, டி.எஸ். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள வாகன விற்பனையகம் ஒன்றுக்குள் நுழைந்த சந்தேக நபர், அங்கிருந்த டொயோட்டா நோவா ரக கார் ஒன்றையும் அதற்கான ஆவணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.
திருடப்பட்ட அந்த வாகனத்தை, மாத்தளை, பல்லேபொல பகுதியில் உள்ள அடகு மையத்தில் 15 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்து, அந்த பணத்தில் நவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்தநிலையில், தாம் பணிபுரிந்த அதே உணவகத்தில் பணியாற்றிய தனது காதலியுடன் அந்த மோட்டார் சைக்கிளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் முடிவில் இந்த நபர் கைதாகியுள்ளார்.
Recent Comments