கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது.
எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
யாழ் – சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும். ஒழுக்கமின்மையே இதற்கெல்லாம் காரணம். ஒழுக்கமானது குடும்பத்தில் ஆரம்பித்து, பின்னர் கிராமத்திற்கு பரப்பப்பட்டு, அது நாடு நோக்கி நகர வேண்டும். பழைய அரசாங்கங்களின் செயற்பாடுகளால் அவை தலை மாறி போயிருக்கின்றன.
கடந்த கால அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை அரசியல்வாதிகள் பெற்று கிளிநொச்சியிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி மதுபானசாலைகளை திறந்து இருக்கின்றார்கள். சாப்பாட்டுக் கடைகளை விட மதுபானசாலைகளே அதிகமாக இருக்கின்றன.
பெரிய ஒரு அரசியல் கட்சியின் ஆதாரவாளர்கள் ஒரு போதைப் பொருள் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவிற்கு போதைப் பொருட்களை கொண்டு வந்து தெற்கில் வைத்திருக்கின்றார்கள்.
இதனைக் கடந்த அரசாங்கங்கள் கண்டும் காணாமல் தான் விட்டிருந்தன. ஆனால் எமது ஜனாதிபதி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளார்.
இவ்வாறானவர்கள் உண்மையிலேயே 15-20 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கைது செய்யாமையால்தான் அவர்கள் போதைப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் அளவிற்கு திறமை பெற்றிருக்கின்றார்கள்.
ஒரு அரசாங்கத்திற்கு நிழல் அரசாங்கமாக செயல்படும் அளவிற்கு அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள்.
எனவே அவர்களை அடக்குவது எமது அரசாங்கத்தின் கடமை. அதனை நாங்கள் செய்வோம் என்றார்.
Recent Comments