2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் மாத்திரம் 672 ஏக்கருக்கும் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலமான விடைக்கான கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
வவுனியா வானூர்தி நிலையத்தை விஸ்தரிப்பதற்காக தச்சங்குளம், வவுனியா, இறம்பைக்குளம் மற்றும் கோவில் குளம் ஆகிய கிராமங்களில் 168 பேருக்குச் சொந்தமான 446.68 ஏக்கர் நிலம் வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த பகுதி ஊடான பாதையைப் பயன்படுத்துவதற்கு மக்களுக்கு நெருக்கடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தச்சங்குளம் மற்றும் மூன்று முறிப்பு வீதியை மக்கள் பாவனைக்காகத் திறப்பது, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய தீர்மானமாகும்.
அதற்கமைய, விமானப்படை தளம் மற்றும் பாதுகாப்பு தலைமையகத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போது குறித்த வீதியை மக்கள் பாவனைக்குத் திறக்க முடியாது என பிரதி பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, குறித்த வீதிக்குப் பதிலாக மாற்று வீதிகளை மறுசீரமைப்புச் செய்து வழங்குவது சிறந்தது என்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, தச்சங்குளம் இராணுவ முகாமின் ப்ராவோ நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வீதித் தடை முதல் பாதுகாப்பு தலைமையகம் வரை புதிய வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த வீதியை சமளங்குளம் ஏ9 வீதியில் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பிரதியமைச்சரின் இந்தத் தகவல்களை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துரையாடியதன்படி, மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வவுனியாவில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து நடவடிக்கை எடுப்பீர்களா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, இந்த இரு விடயங்கள் குறித்தும் தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகக் கூறினார்.
எனினும், 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில், வடக்கில் மாத்திரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 586 ஏக்கர் அரச காணியும் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமைய, வடக்கில் மாத்திரம் 672 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 34.58 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.


Recent Comments