பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடக அடக்கு முறைக்கான ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
“பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் ஊடக அடக்கு முறைக்கான ஓர் ஆயுதமாகும். மஹிந்த இலேபெருமவை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பது தவறானது”
கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை இரத்து செய்யுமாறு சுதந்திர ஊடக இயக்கம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.
அவ்வாறு இருக்கையில், இத்தகைய அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய அரசியல் இயக்கம் ஒன்று தலைமையேற்று நடத்தும் தற்போதைய அரசாங்கம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்த அல்லது ஒடுக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்க ஒரு நிலையாகும்.
பதிவாகியுள்ள மிகச் சமீபத்திய சம்பவம், அருண பத்திரிகையின் ஆசிரியர் மஹிந்த இலேபெரும வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப் பட்டுள்ளமையாகும்.
பொலிஸ் அறிக்கைகளைப் பெறுவதற்கு கிராம உத்தியோகத்தர் சான்றிதழுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவரின் சான்றிதழும் அவசியம் எனக் குறிப்பிட்டு, இலேபெரும ஆசிரியராகப் பணியாற்றும் அருண பத்திரிகையில் செய்தி வெளியானதே இதற்குக் காரணமாகும்.
பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஆனந்த விஜேபால, இச்சந்தர்ப்பத்தில் மக்கள் நிராகரித்த கடந்த அரசாங்கங்களைப் போன்று தன்னிச்சையாக நடந்து கொள்ளக் கூடாது. செய்தி தவறாக இருப்பின் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி உண்மையை வெளியிடுவதும், செய்தி உண்மையாக இருப்பின் அந்த தவறான நடைமுறையை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்துவதுமே அவரது அமைச்சுப் பதவிக்கான பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதாகும்.
எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் உண்மையானதாகும். முழு சமூகமும் அந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொலிஸ் சான்றிதழைப் பெறுவதற்கு அரச அதிகாரியான கிராம உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்தலைப் பெறுவது தவறல்ல.
ஆனால் அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கக்கூடிய சிவில் குழுவொன்றின் தலைவரிடமிருந்து இவ்வாறான உறுதிப்படுத்தலைப் பெற வைப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ஏனெனில் அத்தகைய நபர்கள் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்வார்கள் என்று கூறுவது கடினமாகும்.
அவ்வாறிருக்கையில், அமைச்சர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் பற்றிக் குறிப்பிட்டு ஊடகவியலாளர் மஹிந்த இலேபெருமவை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்கவோ அல்லது தனது பொறுப்பில் உள்ள பொலிஸாருக்கு அழைக்கவோ முயற்சிப்பது அரசியல் ரீதியாக தவறான முன்னுதாரணமாகும்.
இந்நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தின் ஊடாக இவ்வாறான நடத்தைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது உட்பட ஒட்டுமொத்த மாற்றத்தையே எதிர்பார்த்தார்கள் என்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நம்பிக்கையாகும்.
எனவே, ஊடகவியலாளர் மஹிந்த இலேபெருமவை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பது செய்யக்கூடாத ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், பொலிஸாருக்கு ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அவரிடம் செல்ல முடியும் என்பதையும் அறியத் தருகிறோம்.
அத்தோடு, அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு பதிலளிக்கும் உரிமை இருப்பதால் பத்திரிகையைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் உள்ளதென்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும். மேலும், சில சந்தர்ப்பங்களில் அடக்குமுறைச் சட்டமாகவும், சில ஊழல் மிக்க அரசியல்வாதிகள் ஊடகங்களிடமிருந்து தமது நிர்வாணத்தை மறைத்துக் கொள்ளும் திரையாகவும் அமையும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் எதிராகப் பயன்படுத்த வேண்டாம் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலை முற்றாக ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதிகளை இத்தகைய பரந்த சீர்திருத்தங்களின் மூலமே நிறைவேற்ற முடியும்.” என்றுள்ளது.


Recent Comments