இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த வடக்கு மாகாணம், இன்று கல்வித் தரத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.
போருக்குப் பின்னரான சவால்கள், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் எனப் பல காரணிகள் இதற்குக் கூறப்பட்டாலும், கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தக் கட்டுரையானது, வடக்கு மாகாண கல்வியின் தற்போதைய நிலை, அதன் வீழ்ச்சிக்கான காரணிகள், குறிப்பாக அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கிறது.
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி என்பது வெறும் புள்ளி விவரங்களில் அடங்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கும் அபாயகரமான அறிகுறியாகும்.
க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாகாணம் தொடர்ச்சியாக பின்தங்கிய நிலையை எட்டியுள்ளது. உதாரணமாக, 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 70% மாணவர்கள் மாத்திரமே உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இது தேசிய சராசரியை விடக் குறைவானதாகும். குறிப்பாக, கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருவது, இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

அதிகாரிகளின் அசமந்தமும் நிர்வாகச் சீர்கேடுகளும் இந்தக் கல்விச் வீழ்ச்சிக்குப் பின்னால் காணப்படுவதுடன், மாகாணக் கல்வி அமைச்சிலிருந்து வலயக் கல்வி அலுவலகங்கள் வரை பரவியிருக்கும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், நிர்வாகத் திறமையின்மையுமே பெரும் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் இனங்காணப்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவோம்.
1. ஆசிரியர் பற்றாக்குறையும் சமனற்ற நியமனங்களும்
மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, குறிப்பாக முக்கிய பாடங்களுக்கு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. தற்காலிக மற்றும் தொண்டர் ஆசிரியர்களைக் கொண்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அவலநிலை பல பாடசாலைகளில் காணப்படுகிறது.
மேலும், ஆசிரியர் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் காணப்படும் அரசியல் தலையீடுகளும், அதிகாரிகளின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளும் இந்தப் பிரச்சினைக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
தேவைப்படும் பாடசாலைகளை விடுத்து, நகர்ப்புற மற்றும் வசதியான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் முண்டியடிப்பதும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விடுவதும் வடக்கின் கல்வியின் தரத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
உதாரணமாக தீவகம், மடு, துணுக்காய், வவுனியா வடக்கு போன்ற பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்று வரும் புதிய ஆசிரியர்கள் தமது தனிப்பட்ட அரசியல், அதிகாரிகளின் தயவுடன் தமக்கு விருப்பமான வலயங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்கின்றனர். இதற்கு சில வலய அதிகாரிகளும் மேலதிகாரிகளுடனான தமது நல்லுறவு பாதிப்படையும் என்பதற்காக விடுவிப்பை வழங்குகின்றனர்.

2. வளப் பங்கீட்டில் பாரபட்சம்
பாடசாலைகளுக்கான வளப் பங்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லாததும், பாரபட்சம் காட்டப்படுவதும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பாடசாலைகளை மேலும் நலிவடையச் செய்கிறது.
பௌதீக மற்றும் கற்றல் உபகரணங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்பதுடன் திட்டமிடல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் காணப்படும் குளறுபடிகள், பல திட்டங்கள் ஆரம்பத்திலேயே முடங்கிப் போகக் காரணமாகின்றன.
உதாரணமாக வளம் தேவை உள்ள அதிக மாணவர்களை உடைய பாடசாலைகளுக்கு குறைந்த உதவிகளை வழங்கியபடி குறைந்த வளத் தேவையுள்ள போதும் சில அதிபர்களுடன் காணப்படும் தனிப்பட்ட நல்லுறவு காரணமாக அதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன ( ஆதாரங்கள் உள்ளது)
3. கண்காணிப்பின்மையும் பொறுப்புக்கூறல் இன்மையும்
பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைக் கண்காணித்து, தரத்தை உறுதி செய்ய வேண்டிய கல்வி அதிகாரிகள், தமது கடமைகளிலிருந்து தவறுவதாக பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பாடசாலைகளுக்கு விஜயம் செய்வது, ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவது, மாணவர்களின் அடைவு மட்டத்தை பகுப்பாய்வு செய்வது போன்ற அடிப்படைப் பணிகள் கூட முறையாக நடைபெறுவதில்லை.
இதனால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் ஒருவித பொறுப்பற்ற தன்மை உருவாகிறது. தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போது, அதனைத் திருத்திக் கொள்வதை விடுத்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டித் தப்பிச் செல்லும் போக்கே அதிகாரிகளிடம் மேலோங்கியுள்ளது.
எனினும் அதிகாரிகள் தமக்கான எரிபொருள் கொடுப்பனவு, வாகன அனுமதிப் பத்திரம், தொலைபேசிக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு, போக்குவரத்துக் கொடுப்பனவு, அரச வாகனம், அரச நிதியில் கல்விச் சுற்றுலா, இடருதவிக் கடன்கள், கடமை விடுமுறைகள் எனப் பல சலுகைகளைப் பெறுகின்ற போதும் தமது கடமையைச் சரிவரச் செய்வதாகத் தெரியவில்லை.
4. சமூகப் பொருளாதாரக் காரணிகள்
கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கு பிரதான காரணியாக இருந்தாலும், சில சமூகப் பொருளாதாரக் காரணிகளும் இந்தக் கல்வி வீழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன. அந்த வகையில்,
பெற்றோர்களின் பொருளாதாரப் பின்தங்கிய நிலை, போரினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள், சொத்தழிவுகள், அதிகரித்துவரும் தனியார் கல்வி மோகம் மற்றும் சமூகச் சீர்கேடுகள் போன்றவை மாணவர்களின் கற்றல் சூழலை முழுமையாகப் பாதிக்கின்றன.
எனினும், இந்தக் காரணிகளைக் கையாண்டு, மாணவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதும் கல்வி நிர்வாகிகளின் பொறுப்பாகும்.
தீர்வுகள்
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி என்பது உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பாரிய நெருக்கடியாகும். இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் மாகாணத்தை கல்விப் பாதையில் நிமிரச் செய்ய, பின்வரும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன,
1. வெளிப்படையான நிர்வாகம்
ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் வளப் பங்கீட்டில் முழுமையான வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் பாடசாலைகளின் நிர்வாக விடயங்களில் அதிபரை மீறி தலையீடு செய்தல் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.
ஒரு பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்பது ஒரு குடும்பம், ஆகவே இதற்குள் ஏனையோரின் தலையீடுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
2. வகைகூறல்
அனைத்து மட்டங்களிலுமுள்ள கல்வி அதிகாரிகள் தமது கடமைகளுக்குப் பொறுப்புக் கூறும் நிலையை உருவாக்க வேண்டும். செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகாரிகளின் பதவி உயர்வுகளும், ஏனைய சலுகைகளும் வழங்கப்படல் வேண்டும்.
3. திட்டமிட்ட வள முகாமைத்துவம்
பாடசாலைகளின் தேவைகளை துரிதமாக இனங்கண்டு, வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
4. ஆசிரியர் நலன்
ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் தொழில் சார் மேம்பாட்டிற்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.
அரசியல் தலையீடுகளற்ற, அதிகாரிகளின் பழிவாங்கல் மற்றும் அழுத்தமற்ற, நேர்மையான மற்றும் செயல்திறன் மிக்க ஒரு கல்வி நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலமே, வடக்கு மாகாணத்தின் கல்விப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முடியும்.


Recent Comments