யாழ் பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்தர் தெரிவு இன்று (09.12.2025) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதுவரை காலமும் அரசியல்வாதிகளின் ஒத்தாசையுடன் தலைமைத்தும் தேர்வு செய்யப்பட்டு வந்த அதே நிலை இந்த அரசிலும் தொடருமா? அல்லது முடிவிற்கு வருமா என்ற எதிர்பார்க்கை யாழ் கல்விச் சமூகத்தின் மட்டத்தில் எழுந்துள்ளது.
கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் அரசியற் கட்சிகளுடன் இரகசிய தொடர்பாடல்களில் ஈடுபட்டு தமது பதவிக் கதிரைகளை பாதுகாத்துக் கொள்ளும் நபர்களின் கைகளில் இன்று யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு சிக்குமா என்பது இன்றைய தேர்தல் வெளிப்படுத்தும்.

துணைவேந்தரை வாக்களித்து தேர்வு செய்யும் அதிகாரம் பெற்ற பல்கலைக் கழகப் பேரவையில் உள்வாரி மற்றும் வெளிவாரி உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
அவர்களில் உள்வாரி உறுப்பினர்களை விடவும் ஒருவர் அதிகமாக நியமிக்கப்படும் வெளிவாரி உறுப்பினர்கள், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுவார்கள்.
கடந்த காலங்களில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக யாழில் பாரம்பரிய முன்னாள் அமைச்சருடன் இணைந்து செயற்பட்ட குறித்த சில தரப்புக்கள் அதன் பின்னர் நல்லாட்சிக் காலம் மற்றும் அதனையடுத்த வந்த காலங்களில் அரசுடன் நெருங்கிப் பழகிய தமிழ்க் கட்சியொன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தங்கள் உறவுகளைப் பேணி வந்தனர்.
எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனுர அலை வீச தற்போது ஆட்சியில் இருக்கும் அரசின் ஐந்தாண்டு காலத்திற்கான விசுவாமுடையவர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் ஆட்சியில் உள்ள தரப்புக்களுடன் தங்கள் உறவுளைப் புதுப்பித்து யாழ் பல்கலைக் கழகத்தில் தாங்கள் எண்ணுபவற்றை நிகழ்த்துவதற்குத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலியாகிப் போகுவதென்னமோ தமிழ்க் கல்விப் புலம் தான் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் இன்றைய தினம் நடைபெறவுள்ள பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்வில் அரசியல் கடந்து எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பதே எமக்கு முன்னுள்ள வினா.


Recent Comments