Friday, January 23, 2026
HuisBreakingஅங்கீகரிக்கப்படாத தமிழர் தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச குரல் அன்ரன் பாலசிங்கம்..!

அங்கீகரிக்கப்படாத தமிழர் தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச குரல் அன்ரன் பாலசிங்கம்..!

இன்று அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள். தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஒரு ஆயுதமற்ற போராளியாக ஆனால் ஆயுதங்களுக்குச் சமமான வலிமை கொண்ட சிந்தனையாளராக விளங்கினார் அன்ரன் பாலசிங்கம்.

அரசியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு கோட்பாட்டு வடிவம் கொடுத்த முக்கிய ஆளுமையே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.

1938 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். வீரகேசரிப் பத்திரிகையில் பத்திரிகையாளராக தனது பயணத்தை தொடங்கி பின்னர், கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக இணைந்தார்.

அங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார்.

அன்ரன் பாலசிங்கம் தொடர்பில் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவிக்கும் போது,

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்க பலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்து விட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தேசத்திற்கே இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக் காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது.

துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்று போய் விட்டது. தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம் புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்து கொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது.

தினம் தினம் நாம் பகிர்ந்து கொண்ட வாழ்பனுபவத்தில் வலிமை பெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல என்பதைக் கண்டு கொண்டேன்.

மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடிய போதும், தாங்க முடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும், தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டு நின்றது. அவர் துன்பத்தால் துவண்ட போதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.

எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக் கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம் பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத் தமிழினம் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேச சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப் பணிக்கு மதிப்பளித்து “தேசத்தின் குரல்” என்ற மாபெரும் கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.

பாலாண்ணை உண்மையில் எம்மை விட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!