Saturday, January 24, 2026
HuisBreakingகிளிநொச்சி இளைஞன் போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது..!

கிளிநொச்சி இளைஞன் போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது..!

கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த இளைஞன்(வயது22) ஒருவர் போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பிரான்ஸ் போலி கடவுச் சீட்டை வைத்துக் கொண்டு ஓமான், மஸ்கட் நகர் ஊடாக ஜெர்மனி நோக்கி பயணிக்க முயன்ற இளைஞனே குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவராவார்.

ஓமான், செல்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை 05.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த குறித்த நபர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு கரும பீடத்தில் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட சந்தேகத்தில் இளைஞனை தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போது, இளைஞனுடன் அவர் வைத்திருந்த அனைத்து ஆவணங்களும் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவரின் கடவுச்சீட்டு போலியானது எனவும் அதில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் மற்றும் முத்திரைகளும் போலியானவை என்றும் தெரியவந்துள்ளது.

பின்னர் இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​ஒரு தரகருக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் வழங்கி குறித்த கடவுச்சீட்டை பெற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞன், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!