அடுத்த வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டு பல்கலைக் கழகங்களை முடக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைகளின் பிரதானிகளை நீக்கும் அதிகாரம் பல்கலைக்கழக செனட் சபைக்கு சட்டமொன்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை திருத்தம் செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார்.
எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமரின் வாக்குறுதியை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் எனவே குறித்த விடயத்தில் உடனடி தீர்வொன்றை வலியுறுத்துவதாகவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறின்றேல் அடுத்த வாரம் முதல் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களையும் முடக்கும் வகையில் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் சாருதத்த இளங்கசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Recent Comments