வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கந்தசாமிநகர் கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள நித்தியநகர் கிராமத்திற்கு இன்று (26.12) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கள விஜயம் செய்திருந்தார்.

அண்மைய வெள்ளப் பாதிப்பின் பின்னர் பாதிக்கப்பட்ட தமது கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நிவாரண திட்டங்களும் வழங்கப்படவில்லையென்றும் தம்மை அரச அதிகாரிகள் எவரும் கண்டு கொள்ளவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று குறித்த கிராமத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்திருந்தார்.
விடயம் தொடர்பில் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தொலைபேசியூடாக விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், மேலதிக அரசாங்க அதிபரின் பணிப்பின்கீழ் மாவட்ட செயலகத்தின் விசாரணைக் குழுவினர் நித்தியநகர் கிராமத்திற்கு வருகை தந்து முறைப்பாடு தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியதுடன் வெள்ள பாதிப்புக்குள்ளான வீடுகளையும் பார்வையிட்டனர்.
அத்துடன் குறித்த கிராமத்தில் மிகமோசமாக பாதிப்படைந்துள்ள வீதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டிருந்தார். அவற்றினை புனரமைப்பது தொடர்பில் பிரதேச சபையினூடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தேவைப்பாடுகள் நிறைந்த நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலயத்தையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த கிராமத்தில் புனரமைக்கப்பட்டு வரும் குளத்தினையும் ஆய்வு செய்திருந்தார்.
இதன் போது செட்டிகுளம் பிரதேசசபையின் உபதவிசாளர் தே.சிவானந்தராசா (ஜெகன்), பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், செட்டிகுளம் பிரிவு இணைப்பாளர் ச.பத்மசீலன் (ஜெகன்) ஆகியோரும் இணைந்திருந்தனர்.
ஊடகப்பிரிவு


Recent Comments