வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2025ம் ஆண்டுக்கான உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்வு தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களின் தலைமையில் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.சரத்சந்திர அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் இ.ரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கடந்த பேரிடர் காலப் பகுதியில் சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் மீட்பு நடவடிக்கைகள், இடர் முகாமைத்துவ செயற்பாடுகள், உதவி வழங்கல் ஆகியவற்றை சபையின் தவிசாளர் தலைமையில் திறம்பட முன்னெடுத்த தொழினுட்ப உத்தியோகத்தர்கள், வருமானவரி பரிசோதகர்கள் மற்றும் ஏனைய நிரந்தர, அமைய ஊழியர்களுக்கான விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.
மேலும் இடர்கால மீட்பு பணியில் பணியாற்றிய சபையின் ஊழியர்களுக்கு உபதவிசாளர் கோணேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் சொந்த நிதியில் உலருணவு பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் 2024ம் ஆண்டு பிரதேச சபைகளுக்கிடையிலான தரப்படுத்தலில் தேசிய ரீதியில் 3ம் இடத்தை பெற்று “சுவர்ணபுரவர” விருதினை தனதாக்கி கொண்ட மேற்படி சபையின் செயலாளர், உத்தியோகத்தர்களுக்கு விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து தேசிய ஆவணமாக்கல் சபையால் கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாத போட்டிகளை திறம்பட நடாத்திய நூலகங்களில் சபையின் ஆளுகைக்குட்பட்ட கூமாங்குளம் நூலகம் தேசிய தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்டதை கெளரவிக்கும் வகையில் நூலக உத்தியோகத்தர்களுக்கு விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் சபையின் சகல உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வு எதிர்வரும் காலங்களில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மேலும் ஆர்வத்துடனும் திறம்படவும் மக்களுக்கு சேவையாற்ற ஊன்றுகோலாய் அமையுமென சபையின் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.






Recent Comments