கல்வி சீர்திருத்தம் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானம் – பிரதமரை இலக்காக வைத்து வெளியிடப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாகவும், மிகவும் பலமான மற்றும் நூதனமான உலகத்திற்கு பொருத்தமான கல்வி சீர்திருத்தத்தை உருவாக்குதல் அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பிரச்சினைக்குரிய தரம் 6 தொகுதியின் உள்ளடக்கத்தை பரீட்சிப்பதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கேற்ப தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
கல்வி சீர்திருத்த செயற்பாடுகளை குறுகிய நோக்கத்துடன் அடைந்து கொள்வதற்காக சிலர் பிரதமரை இலக்காக வைத்து மேற்கொள்ளும் இந்த பிரச்சாரத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் நாட்டின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானம் என்றும், இது போன்ற கட்டமைப்பு கல்வி சீர்திருத்தம் சமீபத்திய வரலாற்றில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்வியியலாளர்கள் இதுபோன்ற சீர்திருத்தங்களை குறைந்தது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், கடந்த காலங்களில் நாட்டின் கல்வி முறையில் இது போன்ற செயல்முறை நடைபெறவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இந்த சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே அனைத்து தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இந்த சீர்திருத்தங்கள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழி மொடியூல் குறித்து தற்போது விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், தரம் 6 இல் சேர்க்கக் கூடாத உள்ளடக்கத்தை அரசாங்கம் கண்டறிந்து அந்தப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவறான கல்வி முறையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஒரு அரசாங்கமாக அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
6 ஆம் வகுப்பு தொகுதி தொடர்பாக கல்வி அமைச்சு உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,
மேலும் அடையாளம் காணப்பட்ட பிழைகளை சரிசெய்வதன் மூலம் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த கல்வி சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம் தர்க்கரீதியான, புத்திசாலித்தனமான மற்றும் நவீன சமூகத்திற்கு ஏற்ற தலைமுறையை உருவாக்குவதாகும், மேலும் அரசாங்கம் அதற்கு முழுமையாக உறுதி பூண்டுள்ளது, பெற்றோர்கள் இது தொடர்பாக எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


Recent Comments