முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல், வசந்தபும் கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.
வெள்ள அனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வசந்தபுரம் கிராம மக்களின் வேண்டுகோளிற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினரால் அப்பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னர் தாம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக வசந்தபுரம் கிராமமங்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டது.
குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் வசந்தபுரம் கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் கிராமத்திலிருந்து நீண்டதூரத்தில் குடிநீருக்கான நீர்த்தாங்கியொன்று வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிராம மக்கள், குடிநீரைப் பெறுவதற்கு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும், ஒரு நீத்தாங்கி குடிநீர் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்தனர்.
எனவே குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் இடர்பாட்டினைத் தீர்த்து வைக்குமாறு இதன் போது நாடளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் கிராமமாக வசந்தபுரம் கிராமம் காணப்படுவதால், குறித்த கிராமத்தை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வேறு குடியமர்த்தப்படுகின்ற போது தமது வாழ்வாதாரத்தினைக் கருத்திற் கொண்டு ஒரு குடும்பத்திற்கு 0.5ஏக்கர் காணியினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வசந்தபுரம் கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கைகளை எழுத்து மூலமாக கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், வசந்தபுரம் கிராமமக்களின் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



Recent Comments