மக்களின் அடிப்படை உரிமையை மீறும் நாட்டை மீண்டும் பின்னுக்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய அரசுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பல விடயங்கள் மக்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளன. அதேநேரம் எமது நாடு சர்வதேச நாடுகளால் ஒதுக்கப்பட்டு மீண்டும் பின்னுக்கு கொண்டு செல்லும் ஆபத்து இருக்கிறது. அதனால் இந்த சட்டமூலம் தொடர்பில் அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து செயற்படுத்த வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP வரிச் சலுகை ரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதனால் எமது நாட்டின் ஆடை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை எங்களுக்கு பெற்றுக் காெள்ள முடியுமாகியது.
அதனால் புதிய பயங்கரவாத எதி்ர்ப்பு சட்ட மூலத்தில் தெரிவிக்கப்படும் சில விடயங்கள் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் செய்து கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிரான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறதா? அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்த வாக்குறுதிகளுக்கு மாற்றமான விடயங்களை உள்ளடக்கி இருக்கிறதா என நாங்கள் பார்க்க வேண்டும். இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்த்தின் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
அன்று இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தைக் கூட கைச்சாத்திடுவதற்கு இடமளிக்காமல் போராட்டம் மேற்கொண்டு வந்தார்கள். இந்திய எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் இன்று இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை. ஒப்பந்தத்தின் மூலம் கச்ச தீவை தற்காலிகமாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை வழங்கே ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்தும் பொய்யாலே ஆட்சியை கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த அடிப்படை நிவாரண தொகைகளை இன்னும் வழங்கி முடிக்கவில்லை. அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணி்க்கையைக் கூட இன்னும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லை.


Recent Comments