Wednesday, January 14, 2026
Huisதாயகம்கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்; முல்லைத்தீவு மாவட்டச் செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி..!

கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்; முல்லைத்தீவு மாவட்டச் செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி..!

முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப் பற்று உதவிப் பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன். 12.01.2025நேற்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மிக முக்கியமாக இச்சந்திப்பில் கேப்பாபுலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்களை மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன் போது கோரியிருந்தார்.

குறிப்பாக கடந்த 07.01.2026அன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றபோது கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மை நிலையினை சுட்டிக் காட்டியிருந்தார்.

இதன் போது கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இராணுவத்தினரிடம் கோரப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையியில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள், ஆவணங்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.

இந்நிலையில் விரைவாக அந்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை கையளிப்பதாக மாவட்டச்செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் இதன் போது பதில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டிருந்தன. அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் ஆகியோரையும் இதன் போது சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!