நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது.
பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர்.
பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச் சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்:
பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder)
பிரிவு 300: கொலை முயற்சி (Attempt to Murder)
சாரதி வேண்டுமென்றே பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பாலத்தைக் கடக்க முயன்றதால், இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுகள் அவசியமானவை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவத்திலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிபோது உயிரிழந்திருந்தார்.
நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாரதி தனுஷ்க குமாரசிங்கவை எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “சாரதிக்கு எவரையும் கொல்லும் நோக்கம் இருக்கவில்லை” என வாதிட்டு பிணை கோரினர்.
எனினும், குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன் பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.


Recent Comments