அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரல் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து இன்று வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வவுனியா குருமன்காட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
அக் கலந்துரையாடலில்,
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2011ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்படவிருந்த “கிவுல் ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தை எந்தவிதமான மீளாய்வுமின்றி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளமையானது தமிழ் மக்களுக்கு அதிலும் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதாக உள்ளது.

மேற்படி திட்டத்தை நிறுத்தக் கோருவது தொடர்பான கூட்டம் இன்று (24.01.2026) வவுனியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததுடன் இத் திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

கிவுல் ஓயா திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக எதிர்வரும் 30ம் திகதி (30/01/2026) வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வை காண்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.


Recent Comments