அரசாங்கம் நிர்ணய விலையில் இன்னும் நெல் கொள்வனவு செய்யவில்லை, இது விவசாயிகளுக்கு செய்யும் பாரிய அநியாயமாகுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழும், அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவின்கீழும் வீசேட தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்ற விவாதத்திலே கடந்த 06.02.2025 கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எங்களுடைய பிரதேசத்திலே இப்போது 65 வீதத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் அறுவடை செய்யப்பட்டு முடிந்துவிட்டது.
ஆனால் இந்த அரசாங்கத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை விலை நிர்ணயத்தை செய்து இன்றுவரை எங்களுடைய மாவட்டத்திலே நிர்ணயித்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யவில்லை. அரசின் ஆகக் குறைந்த கொள்வனவு விலை 120 ரூபா.
ஆனால் எங்களுடைய மாவட்டத்தில் 80 ரூபாய்க்கு கொள்வனவு செய்கிறார்கள். இது ஒரு பாரிய அநியாயம். ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயி கிட்டத்தட்ட 30,000 ரூபாவை இந்த கொள்வனவினூடாக இழக்கின்றார்கள்.
இந்த அனர்த்தத்தாலே அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று நான் நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவரோடு பேசிய போது அவர் கூறினார்,
அடுத்த திங்கட் கிழமையில் இருந்து கொள்வனவு செய்ய இருப்பதாக சொன்னார். 70 வீதம், 75 வீதமான விவசாய நடவடிக்கைகள் நிறைவுபெற்ற பின்னர் இனி யாரிடம் கொள்வனவு செய்ய போகின்றீர்கள். இதுதான் கடந்த வருடமும் நடந்தது.
ஆகவே தயவு செய்து இந்த நெல் கொள்வனவை இப்போதாவது, மிகுதியாக இருக்கின்ற 30 வீதமான விவசாயிகளாவது பயனடையக் கூடிய வகையில் நீங்கள் செய்ய வேண்டும்.
அடுத்த வருடத்திலாவது எங்களுடைய பிரதேசத்தில் அறுவடை நடைபெறுகின்ற போது அந்த நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.


Recent Comments