Sunday, February 8, 2026
Huisதாயகம்மக்களின் எதிர்ப்பையும் மீறி கிவுல் ஓயா திட்டம்; அரசின் அவசர நகர்வு..!

மக்களின் எதிர்ப்பையும் மீறி கிவுல் ஓயா திட்டம்; அரசின் அவசர நகர்வு..!

வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அந்த திட்டம் சம்பந்தமாக நாளை திங்கட்கிழமை (09) மணலாறில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளுராட்சி மன்றங்களினுடைய பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது கொழும்பிலிருந்து வருகைதரவுள்ள மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் தரப்பினர்களுக்கு காணப்படும் சந்தேகங்களுக்கான பதிலளிப்புக்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயாத் திட்டம் சம்பந்தமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளும் மிகத்தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினை அடுத்து, கிவுல் ஓயாத் திட்டத்தினை முன்னெடுப்பதால் காணப்படுகின்ற பிரச்சினைகளை கண்டறியும் முகமாகவே குறித்த கள ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் குறித்த திட்டத்துக்கான அங்கீகாரத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியிருந்த நிலையில் அத்திட்டம் சம்பந்தமாக அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை.

எனினும் தற்போது மக்கள் எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் கள ஆய்வுப் பணிகளை அவசரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தவின் பங்கேற்புடன் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாவட்டச் செயலகத்தில் கிவுல் ஓயாத் திட்டம் சம்பந்தமாக இறுதியான கூட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!