வன்னி மாவட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரிய இடமாற்ற பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.
கல்வி அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்கூட்டம் பிரதமரும், கல்வி அமைச்சருமாகிய ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (18.02.2026) பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் பிரதமரின் கவனத்திற்கு குறித்த விடயங்களை தெரியப்படுத்தினார். அவர் கூட்டத்தின்போது மேலும் தெரிவித்ததாவது,
எமது பிரதேசங்களில் இடமாற்றங்களின் போது, குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்களின்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிறந்த இடமாற்றக்கொள்கை ஒன்று இல்லாமையே இதற்கு காரணமாகும். ஏனைய திணைக்களங்களில் வருடாந்த இடமாற்றங்களின் போது நீண்டாகாலமாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்செல்ல தகுதியானோர் மற்றும் வெற்றிடமாகவுள்ள எண்ணிக்கை ஆகிய இரண்டினையும் சேர்த்தே இடமாற்ற எண்ணிக்கை அறிவிக்கப்படும். எனினும் கல்வித்திணைக்களங்களின் கீழ் அவ்வாறு நடைபெறுவதில்லை.
வெற்றிடங்களின் எண்ணிக்கை மாத்திரமே இடமாற்ற என்ணிக்கையாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் நீண்டகாலம் சேவையாற்றி இடமாற்றம் பெற்று செல்லவேண்டிய உத்தியோகத்தர்கள் பாதிக்கப்படுவதுடன், இடமாற்ற பிரச்சினைகளால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால் இடமாற்ற விடயங்களின் போது மேற்சொன்ன இரு விடயங்களும் பின்பற்றப்படவேண்டும். அவ்வாறு செய்தால் இடமாற்றங்களின்போது எதுவித பிரச்சினையும் ஏற்படாது. ஆகையால் அதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், இது ஒரு சிறந்த யோசனை எனவும், இயலுமானவரையில் இந்த வருடம் இந்த யோசனையினை நடைமுறைப்படுத்த முயல்வதாகவும், அல்லது அடுத்த வருடம் தொடக்கம் நடைமுறைப்படுத்தி ஆசிரிய இடமாற்றங்களில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் கல்வித்திணைக்களங்களின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு பூரணப்படுத்தப்படாதுள்ள கட்டடங்கள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கொண்டுவந்தார். ஆட்சிக்கு வரும் அரசுகள் கடந்த காலங்களில் மாகாணப்பாடசாலைகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடங்களை அமைத்தன. எனினும் அவற்றில் பல பூரணப்படுத்தப்படாதுள்ளது. இதுதொடர்பில் கவனம் எடுக்கவும்.
வவுனியாவில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கடந்தகால நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப கல்விக்கான ஆய்வுகூடம் 90 வீதமான வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட நிலையில் பாவிக்கமுடியாதுள்ளது.
எஞ்சிய 10 வீதமான வேலைகளை நிறைவுசெய்து கொடுக்கும்பட்சத்தில் மாணவர்கள் அதனை பயன்படுத்தி பயனடைவர். ஆகவே இவ்விடயத்தில் அதிக கரிசனை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு குறித்த வேலைத்திட்டங்களை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் பதிலளித்திருந்தார்.


Recent Comments