மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அவருக்காக அரசாங்கம் முன்னின்று வாதிடக் கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நாட்டின் மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால், இந்த அரசாங்கத்தில் உள்ள 159 உறுப்பினர்களும் இந்த மோசடிக்காக முன்நிற்க முடியாது.
விலைமனு வழங்கப்பட்ட விதம் தவறானது என்று கணக்காய்வாளர் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விலைமனு மற்றும் அது தொடர்பான விடயங்கள் அனைத்தும் தவறானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த மோசடிகள் காரணமாக நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மிகப்பாரிய திட்டமிட்ட கொள்ளை என அவர் விமர்சித்தார்.
விநியோகஸ்தர்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னரே அவர்களுக்கு ஏல ஆவணங்கள் (Bidding) வழங்கப்பட்டுள்ளன. கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனைகளை மீறி, 42 நாட்களாக இருந்த விலைமனுக் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில ஊழல் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயற்படும் வகையில், நிலக்கரியின் கலோரி அளவு (Kilocalories) வேண்டுமென்றே திருத்தப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமா அதிபரின் இறுதி இணக்கம் கிடைப்பதற்கு முன்னரே இந்த விலை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


Recent Comments