இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய துணைத் தலைவரின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த உயர்மட்ட விஜயம் விழாக்களாக மட்டும் மட்டுப்படுத்தாமல், பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நோக்கில் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பல ஆண்டுகளாக எதிர்காலம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் எதிர்காலம் மேலும் தாமதப்படுத்தப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்திய அவர்,
அவர்களின் மீள்குடியேற்றத்தை பாதுகாப்பாகவும், மரியாதையுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் மேற்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் திரும்பி வரும் அகதிகள் எந்தவித தொந்தரவும், அச்சுறுத்தலும் அல்லது நிர்வாக தடைகளும் எதிர்கொள்ளாத வகையில் தெளிவான முறைகள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாக்கு நீரிணை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வட மாகாண மீனவர்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் கைது சம்பவங்கள் குறித்தும் கவலை தெரிவித்த அவர், இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நியாயமான தீர்வு காண, பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து இரு நாடுகளும் செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கிடையேயான வரலாற்று, பண்பாட்டு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இரு நாடுகளின் உறவுக்கு இடையே கடல் ஒரு தடையாக இல்லாமல், இணைப்பாக செயல்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய துணைத் தலைவரின் இந்த விஜயத்தை பயன்படுத்தி அகதி பிரச்சினை, மீனவர் மோதல்கள் மற்றும் எல்லைத் தாண்டிய இணைப்புகள் போன்ற முக்கிய விடயங்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட தெளிவான செயற் திட்டத்தை இரு நாடுகளும் உருவாக்க வேண்டும் என கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.


Recent Comments