நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டது.
வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு இலக்கம் 8 மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அந்த வழக்கில் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி, அந்த வழக்கின் நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த வழக்கிலும் பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
விடயங்களை ஆராயந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வழக்கை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி நிர்ணயித்தார்.
2009 மார்ச் 31ஆம் திகதியில் இருந்து 2013 டிசம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 வங்கிக் கணக்குகளில் பேணப்பட்ட 59 மில்லியன் ரூபாவை ஈட்டிய விதத்தை உறுதிப்படுத்தாமை காரணமாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டியான டேஸி பொரஸ்ட்டுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பிரதிவாதிகள் மீது 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


Recent Comments