முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக பிரித்தானியா சென்ற போது 16.2 மில்லியன் ரூபாய் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் கொண்ட நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இத்தகைய நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் ரீதியாக இம்முடிவுகள் அறிவிக்கப்படுவது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு ஜனாதிபதி தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டாலும் அவருக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், அதற்கான செலவுகளை நிதி முறைகேடாகக் கருத முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.டி. ஜயநாயக்க வாதிட்டார்.
அத்துடன் 650 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுத்திய பெரிய அளவிலான ஊழல்கள் விசாரிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகவே தெரிவதாகக் கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Recent Comments