Sunday, April 26, 2026
Huisதாயகம்போதைப்பொருள் கடத்தலுக்கு காவி உடையைப் பயன்படுத்துவதைக் கண்டித்து கூட்டறிக்கை..!

போதைப்பொருள் கடத்தலுக்கு காவி உடையைப் பயன்படுத்துவதைக் கண்டித்து கூட்டறிக்கை..!

இலங்கையின் மூன்று முக்கிய நிக்காயக்களான – சியாம், அமரபுர மற்றும் ராமன்ன ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்கள், பௌத்த பிக்குகள் போல் வேடமிட்டு, காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தனிநபர்களின் சாசன – விரோத மற்றும் சட்டவிரோதச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான செயல்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பௌத்த மதகுருமார்களின் வரலாற்றுப் புகழுக்கும் கௌரவத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தலைமைப் பிக்குகள் இந்த அறிக்கையில் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கைச் சமூகத்தில் பிக்குகளுக்கு வழங்கப்படும் கௌரவத்தையும், காவி உடையின் புனிதத்தையும் இத்தகைய நபர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் “பிக்கு வேடமிட்டவர்கள்” அனைவரும் சட்டத்தின் கீழ் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இத்தகைய சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும், குற்றவாளிகளாகக் கண்டறியப்படுபவர்களை துறவற வரிசையிலிருந்து நீக்குவதற்கும் முறையான சட்ட மற்றும் நிறுவன ரீதியான பொறிமுறை ஒன்று அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான வழக்குகள் தொடர்பாக அந்தந்த நிக்காயக்கள் தத்தமது விசாரணைகளை முன்னெடுத்து, முறையான நடைமுறைகளின்படி குற்றவாளிகளை சங்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இளம் பிக்குகளை இலக்கு வைத்து அவர்களை சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தும் போதைப்பொருள் வலையமைப்புகள் குறித்து சட்ட அமுலாக்க அதிகாரிகள் விரைவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பான அனைவருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தலைமைப் பிக்குகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், புதிய பிக்குகளை மிக நெருக்கமாகக் கண்காணிப்பதும், சாசனத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் யாராவது ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அதற்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுப்பதும் சிரேஷ்ட பௌத்த ஆசிரியர்களின் பொறுப்பு என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!